Categories
அரசியல்

கொரோனா தடுப்பு பணிகள்: 2,570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்… முதல்வர் உத்தரவு..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்றுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மிக அவசியமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணியமர்த்தியுள்ளது. ஏற்கனவே, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள், சுகாதார பணியாளர்கள் என 2715 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 2570 செவிலியர்களை 6 மாத கால பணியில் ஈடுபடுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |