சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.கே.நகர் மின்வாரியத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதேபோல சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா உள்ளது அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை 16 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,008ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.