விழுப்புரத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 4,045 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 159 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 150 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
இதனிடையே கடந்த 4 நாட்களாக சென்னை கோயம்பேட்டில் இருந்து வியாபாரிகள், தொழிலாளர்களால் விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோயம்பேட்டில் இருந்து வியாபாரிகள், தொழிலாளர்கள் என 750 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் வந்துள்ளனர். அவர்களை கணக்கெடுக்கும் பணியை மாவட்ட அதிகாரிகள் நடத்திய நிலையில் 459 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த 459 பேரும் நான்கு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
இதனையடுத்து கணக்கில் வராத மற்ற நபர்களை கண்டறியும் பணியில் வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரத்தில் இதுவரை 20 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களின் என பரிசோதனை முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 187ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் 139 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 544 பேரின் முடிவுகள் வெளியாகவில்லை, 1263 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.