கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார். இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.
எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் இதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000, இலவசப்பொருட்கள் விநியோகம் தொடங்கியது.
ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது. திருவாரூரில் கொரோனா நிவாரணப் பொருட்கள் விநியோகத்தை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார். ஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே ரொக்கம் மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.
அவரவருக்கு உரிய காலம் எது என்பது பற்றிய டோக்கன் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே தென்காசியில் நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வீடுகளுக்கு நேரில் வழங்கப்படாது, ரேஷன் கடைகளில்தான் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் மேலூரில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் ஒருவாரத்துக்கு ரேஷன் விநியோகம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.