கொரோனா சான்றிதழை கட்டாயப்படுத்தியதற்காக மக்கள் ஈஃபில் கோபுரத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் செய்து வருகின்றனர். அதில் ஒரு வகையாக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பும் மக்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதாவது, பொது இடங்களுக்குச் செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதரமாகவோ அல்லது பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றாகவோ சான்றிதழை கட்டாயம் மக்கள் காண்பிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு சில தினங்களுக்கு முன்பு ஆணை ஒன்றை பிறப்பித்தது. இந்த முடிவிற்கு பிரான்சு நாட்டு மக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதன் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டம் நடத்தினர். அதிலும் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்திற்கு முன்பாக திரண்ட மக்கள் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தடுப்பூசியை கட்டாயப்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.