Categories
தேசிய செய்திகள்

கொரோனா – இந்தியாவில் சமூக பரவலாக மாறவில்லை… மத்திய அரசு விளக்கம்..!!

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்காரணமாக  இந்தியாவில் கொரோனா பரவல்  3-வது நிலையான சமூக பரிமாற்றம் என்ற அபாய கட்டத்திற்குச் சென்று விட்டதாக பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், இவற்றை மறுத்துள்ள மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பரவல், சமூக பரிமாற்றத்திற்கு இன்னும் செல்லவில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலை என்பது, பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருப்பதால் அங்கு சென்ற அல்லது அங்கு இருக்கும் இந்தியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது. இரண்டாம் நிலை என்பது உள்ளூர் பரவல். அதாவது வெளிநாட்டில் கொரோனாவுடன் இந்தியாவுக்கு வந்த நபர், அவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் கொரோனாவை பரப்புகிறார். இது குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மூன்றாவது நிலை என்பது, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று அவருக்கே தெரியாது. இவர் வெளிநாட்டிலிருந்து வராதவராக இருப்பார். ஆனால் அவர், மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் கொரோனாவை பரப்பி விடுகிறார். இந்த நிலையின்போது, பாதிக்கப்பட்ட நபர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. இத்தாலி, ஸ்பெயினில் ஏற்பட்டது இதுதான்.

நான்காவது நிலையானது மிகவும் அபாயகரமானதாகும்.  இந்த நிலையில், நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் கொரோனா பரவியிருக்கும். யாருக்கு எங்கிருந்து வந்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலை.  சமூக விலகளை மக்கள்  உரிய முறையில் பின்பற்றினால், கொரோனா வைரசை நாட்டை விட்டே விரட்ட முடியும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Categories

Tech |