அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை, மத்திய அரசின் சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ்குமார் உறுதி செய்துள்ளார். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
இதனால் அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைக்கான தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிறுவனை விமான நிலைய மருத்துவக்குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.