அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அத்தியாவசிய தேவை இன்றி அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி கோவை மாநகராட்சி ஊழியர்கள் அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, அத்தியாவசிய தேவை இன்றி பலர் தங்களது வாகனங்களில் சுற்றித் திரிவதாகவும், இ-பதிவு முறையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவைக்கு பொதுமக்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வரும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து ஆதார் எண் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் செல்போன் எண் போன்ற ஆவணங்களை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதோடு அதிகாரிகள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருக்கும் பொது மக்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.