கொரோனா பரவாமல் தடுக்க தனிமைப்படுத்த வீட்டில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வீடு திரும்பிய நபர் தன்னை வீட்டில் தனிமையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வெளியிட்டிருக்கும் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் வீட்டில் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி பராமரிப்பு பணிகளை செய்பவர்கள் தவறாமல் முக கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. அவர்களின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல் சோப்பு நீரில் ஊற வைத்து துவைத்து வெயிலில் காய போட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கழட்டிய பின் கைகளை நன்கு சோப்பு நீரில் கழுவ வேண்டும். வீட்டில் வயதானோர், கர்ப்பிணி, குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனிமைப்படுத்த பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல், போன்ற வைரஸ் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக 104 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 120 555 550ல் ஆலோசனை பெறலாம் என்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அறிகுறிகள் உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களையும் அடுத்த 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் மூன்று முறையாவது கிருமிநாசினி கொண்டு வீட்டை தூய்மைபடுத்த வேண்டும் என்றும் இவை அனைத்தும் ஒவ்வொருவரின் நலன் பேணுவதற்காக அரசின் அறிவுரைகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.