மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடை, கையுறை மற்றும் முக கவசம் போன்றவற்றை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் மிக அதிகமாக தொற்று பரவுகிறது. இதனால் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு தேவையான அனைத்து தடுப்பு மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 350க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் கொரோனா பாதுகாப்பு கவச ஆடைகள், முகக் கவசம் மற்றும் கையுறை போன்றவற்றை பயன்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் பயன்படுத்திய பொருட்களை அப்புறப்படுத்தாமல் நீண்ட நாட்களாக அங்கேயே குவித்து வைத்துள்ளனர். இப்படி கழிவுகளைை ஆங்காங்கே சேர்த்து வைப்பதால் கொரோனா தொற்று இல்லாதவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கும், பிற நோயாளிகளுக்கும் எளிதில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.