கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலத்தில் இருந்து சுத்தப்படுத்தி எடுக்கும் நீரின் அளவை பொறுத்து மார்ச் 31ம் தேதி வரை அதில் 15 சதவிகிதத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் இதுகுறித்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக இயங்கப்பட்ட ஆலைகள் தங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்க கோரி இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் நீரின் தேவையை கருத்தில் கொண்டு உரிமை பெறாத ஆலையை இயக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஏப்., 28 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.