கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை,
கிருமி நாசினிகள் தெளிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் கோயம்பேடு சந்தையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த காவல் உதவி ஆய்வாளர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 8 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.