பேட்மிண்டன் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்துவதற்கான திட்டமில்லை, என்று சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டோக்கியோவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பேட்மிண்டன் போட்டிக்கான மூன்று தகுதிச்சுற்றாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ,மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஆகியவை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவலால், மூன்று போட்டிகளையும் ரத்து செய்வதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்தது. இதனால் இந்த தகுதி சுற்று போட்டியில் கலந்துகொண்டு , ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக காத்திருந்த வீரர், வீராங்கனைகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் தரவரிசை முறையில் , எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் , இந்த தகுதிச்சுற்றுக்கான கால அவகாசம் ஜூன் 15-ஆம் தேதி வரை இருந்தாலும் ,அதற்குள் சில தகுதிச்சுற்று போட்டிகளை நடத்தும் திட்டம் இல்லை என்று, நேற்று அதிகாரப்பூர்வமாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்து உள்ளது. எனவே இந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் முன்னாள் நம்பர் 1 வீரரான ஸ்ரீகாந்த் ஆகியோரின் ஒலிம்பிக் போட்டி கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. ஆனால் இந்திய பேட்மிண்டன் சார்பாக பி.வி.சிந்து, சாய்பிரனீத், ஆண்கள் இரட்டையர் ஜோடி பிரிவில் சிராக் ஷெட்டி- சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.