முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் மொத்தம் 1,563 முதுநிலை மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் குறைவாக உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தியுள்ளோம்.
அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை இருக்க கூடாது என்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை படுக்கைகளை 500ல் இருந்து 1,000ஆக உயர்த்தப்படும் என அவர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருகிறது, எனவே டிஷ்சார்ஜ் முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் 80 தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேவைக்கேற்ப சென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கு பிரத்தியேக படுக்கைகள் ஏற்பாடு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது என பீலா ராஜேஷ் தகவல் அளித்துள்ளார்.