கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜி ராஜேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 22 அரசு மருத்துவமனைகளையும், 112 தனியார் மருத்துவமனைகளையும் அரசு அனுமதித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் இது தொடர்பான உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு 4, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 6000 ரூபாய், 8000 ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்கிறார்கள்.
முழுமையாக குணமடைந்து வருபவரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். முழு உடல் பாதுகாப்பு கவச உடைக்கு பத்தாயிரம் ரூபாயும் வசூல் செய்யப்படுகின்றது. வெண்டிலெட்டருக்கு நாள் ஒன்றுக்கு 1.25 லட்சம் வசூல் செய்யப்படுகின்றது எனவே தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அது முறையாக வசூலிக்கப் படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மனுவில் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.