கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுவதில் உள்ள குறைகளை களைய வேண்டும். மருத்துவமனைகளில் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல அதிரடி உத்தரவுகளை இன்று பிறப்பித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிப்பது, இறந்துபோன நோயாளிகளை கண்ணியமாக கையாளுதல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அசோக்பூஷண் தலைமையில் விசாரணைக்கு வந்தபோது, டெல்லி அரசுக்கு பிறப்பித்த உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்கிறோம் என தெரிவித்து மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.