ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக இன்று உலகமே இந்தியாவை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனோவை கட்டுப்படுத்தும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்காக உலகமே இந்தியாவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் என்ன.? இந்தியாவில் அவ்வளவு மாத்திரைகள் தயாரிக்க முடியுமா.? அந்த அளவிற்கு கையிருப்பு உள்ளதா.? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நம்மால் முடியும் என்பதே பதிலாக இருக்கிறது.
ஆனால் இந்த மருந்துக்கான மூலப் பொருள்களுக்கு 70% சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு உள்ளது. இதற்கான காரணம் மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளையும் என்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பே வளர்ந்த நாடுகள் மூலப்பொருட்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இந்த நிலையில் சீனா மட்டும் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி வந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு பல கட்டுப்பாடுகளை சீனா விதித்தது. தற்போது கொரோனா தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 95 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மலேரியாவிற்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வேறு சில வியாதிகளுக்கும் இந்த மாத்திரையை பயன்படுத்தப்படும் நிலையில் மாதம் 20 கோடி மாத்திரைகள் தயாரிக்கும் திறனும், சில கோடி மாத்திரைகள் கையிருப்பும் உள்ளது. இதுவே இந்தியாவை நோக்கி உலக நாடுகள் திரும்பியதற்கான காரணம். தற்போது உலகம் சந்தித்து வரும் சுகாதார அச்சுறுத்தலில் ஹைட்ராக்ஸி குளோரோக்குயின் மாத்திரைகளால் இந்தியா தற்போது சர்வலோக நிவாரணியாக மாறி உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.