கொரோனா தடுப்பூசி மையம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையமானது ஒரு நாள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாளில் சுமார் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதன் பிறகு தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை.
அதன் பின் அங்கு தடுப்பூசி போடுவதற்காக சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் நாள் அறிவிக்கப்படும் என்று அந்த மையத்தில் எழுதி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக இருப்பதால் விரைவில் அந்த மையத்தை திறந்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என கூறியுள்ளனர்.