அமெரிக்கா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் பெரியம்மை போன்று எளிதாக பரவும் டெல்டா வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மாறுபாடடைந்த டெல்டா வைரஸ் நூறு நாடுகளுக்கு மேல் பரவி விட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பு டெல்டாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி எனும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில் டெல்டா வைரஸ் சிற்றம்மை, எபோலா, சார்ஸ், பருவக் காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றைப் போல வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே தடுப்பூசி கொண்டால்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்டவர்களை நோய் தாக்கும் போது தடுப்பூசி போடாதவர்களுக்கு தொற்றினால் மூக்கிலும், தொண்டையிலும் ஏற்படும் வைரஸை போலவே தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் இருக்குமென்று சி.டி.சி-யின் இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறியுள்ளார். அதேசமயம் பெரியம்மை, சின்னம்மை போல டெல்டா வைரஸ் பரவும் தன்மை அதிகம் கொண்டது. எனவே மாணவர்கள், ஊழியர்கள் என பள்ளிக்கூடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை சி.என்.என். டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.