Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி இலவசம்..? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்..? கொள்ளிடத்தில் மருத்துவ அலுவலர் விழிப்புணர்வு..!!

கொள்ளிடத்தில் தடுப்பூசி போட ஆரம்பித்த முதல் நாளிலேயே 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 65 பேர் ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதாக கொள்ளிடம் மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் அரசால் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கொள்ளிடம் வட்டார அளவிலான உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி கிராம உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் கருணாகரன் சதீஷ், மருத்துவ மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு முகாமில் கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் கூறியதுயாதெனில்:-

கொள்ளிடம் பகுதியில் 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட தொடங்கிய முதல் நாளிலேயே 65 முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டுக் கொண்டனர். இந்த கொரோனா தடுப்பூசி ரத்த அழுத்தம், புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் இலவசமாக போடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட வருபவர்கள் தவறாமல் ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |