கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் என்றும் அதற்கான முகாம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது
உலக நாடுகளிடையே அதிவேகமாக பரவி ஏராளமான உயிர் வெளியே எடுத்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் பல ஈடுபட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் இருக்கின்றன. இதனிடையே கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து முடித்துவிட்டதாகவும், பரிசோதனையில் தடுப்பு மருந்து பாதுகாப்பு நிறைந்தது என்பது தெரிய வந்ததாகவும் கடந்த மாதம் ரஷ்யா தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பூசியின் சோதனைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு அக்டோபர் மாதம் முதல் தடுப்பூசிக்கான முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கண்டறியப்பட்ட தடுப்பு மருந்தை முதலில் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவில் அமைந்துள்ள கமலேயா நிறுவனமே தடுப்பு மருந்தை உருவாக்கி இருப்பதாகவும் இந்த மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அது பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் தடுப்பு மருந்துக்கான பாதுகாப்பு மற்றும் அறிவியல் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு கௌரவப் பிரச்சனையாக கருதி அவசரஅவசரமாக ரஷ்யா தடுப்பு மருந்தை அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வருடத்தின் இறுதியில் பாதுகாப்பு நிறைந்த சக்தி வாய்ந்த தடுப்பு மருந்தை உருவாக்குவோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனிடையே கனடா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களை ரஷ்ய உளவாளிகள் குறிவைத்து இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையும் அந்நாடு மறுத்துள்ளது.