சீனாவின் ஹூபே மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதைத்தடுக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சீனாவை தவிர்த்து அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
கேரளா மாநிலத்தில் மூவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றை மாநில பேரிடராக கேரளா அறிவித்துள்ளது. நோய் தொற்றை தடுக்கும்விதமாக டெல்லியிலிருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இது தற்காலிக நடவடிக்கை எனவும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்துசெய்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஹாங்காங் நகரில் ஒரு உயிரிழப்பு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.