சென்னை திருவெற்றியூர் மற்றும் எண்ணுரில் கொரோனா தனி வார்டு அமைக்க கூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி,
காலியாக உள்ள மைதானங்கள், சமுதாய நலக் கூடங்கள், மண்டபங்கள் உள்ளிட்டவை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளால் கையகப்படுத்தப்பட்டு அங்கு கொரோனாவிற்கான தனிமை வார்டு அமைக்கவும், மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கும் வசதியை ஏற்படுத்தித் தரவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,
சென்னை திருவெற்றியூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 10 மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு அது பயனாளிகளுக்கு கொடுக்கப்படாமல் கிடைக்கிறது. அதேபோல் எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கப்பாடாமல் இருக்கிறது.
இவை இரண்டையும் கொரோனா வார்டாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், கொரோனா குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத மக்கள் எங்களது பகுதியில் கொரோனா தனி வார்டு அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நேற்று இரவு 400க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மன் கோவில் அருகே ஒன்றுகூடி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அவர்கள் இம்மாதிரியான செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.