பிரித்தானியாவில் ஆய்வகம் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 45 ஆயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தவறான முடிவு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் Wolverhampton என்ற பகுதியில் உள்ள Immensa Health Clinic Ltd என்ற ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தவறான முடிவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் பலருக்கும் Lateral Flow சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Immensa Health Clinic Ltd ஆய்வகம் செயல்படுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 12 வரை சுமார் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இல்லை என அந்த ஆய்வகம் தவறான முடிவு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேசமயம் கொரோனா தொற்று பாதிப்பில்லை என தவறான முடிவு வழங்கப்பட்டதில் அதிகமானோர் தென்மேற்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் NHS அவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.