சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கை தனிமை முகமாக பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் தெரிவித்து மாநகராட்சிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைக்க சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அறக்கட்டளை தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் திமுக மாவட்ட செயலாளர்கள் மா சுப்பிரமணியன், பிகே சேகர்பாபு ஆகியோர் நேரில் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.