உருமாற்றம் அடையும் கொரோனா வைரசின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசில் மாறி வருகிறது என்று நரம்பியல் விஞ்ஞானி மிகுவல் நிக்கோலெலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த பட்டியலில் பிரேசிலும் உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அதிகளவு மக்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மட்டும் பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1840. இதுவரை பிரேசிலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,59,402. இதற்கிடையில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ, இறந்தவர்களின் எண்ணிக்கை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். இறந்தவர்களுக்காக அழுவது எந்த ஒரு பயனையும் தராது என்று மக்களிடம் கூறியுள்ளார்.
தற்போது நரம்பியல் விஞ்ஞானி மிகுவல் நிக்கோலெலிஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் , “கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பிரேசில் ஏற்படுத்தும் அபாயங்களை எதிர்க்கும் விதமாக உலக நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும். தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் செய்யும் இடமாக பிரேசில் மாறிவருகிறது. இதனை தடுக்காவிட்டால் கொரோனா மீண்டும் மீண்டும் புதிதாக உருமாற்றம் அடைந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு நீங்கள் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.