மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன .
இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியதால் இந்தியளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1397ஆக அதிகரித்துள்ளது. இதில் 1238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 124 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்ட மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 50 வயது நபர் உயிரிழந்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் 9 ஆக இருந்த உயிரிழப்பு 10ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 11 பேரும், தெலுங்கானாவில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 10பேர் உயிரிழந்துள்ளார்.