இந்தியாவில் 70 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 87 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 23,401 பேரும், குஜராத்தில் 8,541 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் 8,002 பேரும், டெல்லியில் 7,233 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,785 பேரும், ராஜஸ்தானில் 3,988 பேரும், உத்தரபிரதேசத்தில் 3,573 பேருக்கும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 868 பேரும், குஜராத்தில் 513 பேரும், மத்திய பிரதேசத்தில் 221 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
மேலும் மேற்குவங்கத்தில் 190 பேர் கொரோனாவால் இதுவரை பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 12வது இடத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.