இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா – 1,364, தமிழகம் – 834, டெல்லி – 720, ராஜஸ்தான் – 463 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் ஏப்., 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.