சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதவியல் துறையை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திரு.வி.க மண்டலத்தில் 210 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 199 பேருக்கும், தேனாம்பேட்டையில் 105 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று மண்டலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று, ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரே தெருவை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதேபோல திருவல்லிக்கேணியில் ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க கொரோனவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டு வருவது வேதனையை அளிக்கிறது. இன்று சென்னையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனை முழுவதும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.