சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம் தான். இங்கு தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தொற்றின் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர்.
அதில் நேற்று மட்டும் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து மீதமுள்ள சிறுவர்கள் அருகில் உள்ள சமூக நலக்கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்துதலில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகள் காப்பகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 23 சிறுவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் நேற்றுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,826 ஆக உள்ளது. அதில் தற்போது 9,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. சென்னையில் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,156 ஆக அதிகரித்துள்ளது.