உச்சகட்ட கொரோனா பாதிப்பால் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், படிப்படியாக சீனா மீண்டது. ஆனால், சுமார் 200 நாடுகளுக்கு அந்த கொடிய வைரஸ் பரவியது. ஐரோப்பிய நாடுகள், மற்றும் மேற்கத்திய தீவுகளை இந்த வைரஸ் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மொத்தம் 18.56 லட்சம் (1,856,831) மக்கள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 28 ஆயிரத்து 277 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இத்தாலி தான் இதுவரை முதலிடத்தில் இருந்தது. அதனை தற்போது அமெரிக்கா பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 5 லட்சத்து 60 ஆயிரத்து 433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களையும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அதிபர் டெனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா வரலாற்றில் அனைத்து மாகாணங்களும் பேரிடர் பாதித்த மாகாணங்களாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையும், பலியானவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் முழு ஊரடங்கு மிகுந்த கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.