சென்னை நெற்குன்றத்தில் ராஜிவ் காந்தி நகர், கோதண்டராமன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு தொடர்பு மூலம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் என 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் நேற்று வரை 1460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை விற்பனை கடைகள் மூடிய பிறகு ஊழியர்கள், வியாபாரிகள் என பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
மேலும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், நாளுக்கு நாள் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், கோயம்பேட்டிற்கு சென்று வந்த 13 பேர் மேலும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.