உத்தரபிரதேசத்தில் புதிதாக 125 பேருக்கும், ராஜஸ்தானில் புதிதாக 122 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது.
மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து மீண்டுள்ளனர்” என தெரிவித்தார். இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று 300க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை 3,600-ஐ தாண்டியது. ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை பின்வருமாறு,
உத்தரபிரதேசம்: புதிதாக 125 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 974 ஆக உயர்ந்துள்ளது. அதில், இதுவரை 108 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதேபோல, இதுவரை கொரோனாவுக்கு 14 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26 நோயாளிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ராஜஸ்தான்: மாநிலத்தில் இன்று புதிதாக 122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஜ்மீரில் 3, பன்ஸ்வாராவில் 1, பரத்பூரில் 42, ஜெய்ப்பூரில் 25, ஜெய்சால்மேரில் 1, ஜோத்பூரில் 26, டோங்கில் 2, நாகூரில் 17 மற்றும் கோட்டாவில் 5 பேர் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,351 ஆக அதிகரித்துள்ளது. ஜெய்ப்பூரில் இன்று 4 பேர் உயிரிழந்தனர்.