புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் புதிதாக இரண்டு பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் அதில் இடம்பெற்றிருந்தனர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட உயிரிழப்புகளும் நிஜாமுதீன் கூட்டத்துடன் தொடர்புடையது என்பது தெரியவந்தது.
குறிப்பாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுவையிலும் அதன் தாக்கம் தொடர்ந்துள்ளது. இதனையடுத்து புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியே வர கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.