தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,605ஆக உள்ளது.
இன்று கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் 42ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு சந்தை தான். இங்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் குன்றத்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு நோய் தொற்று முதன் முதலில் உறுதியானது. அவரை தொடர்ந்து, திருமங்கலம் பாடி குப்பத்தை சேர்ந்த கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது.
இவர் மூலமாக 13 பேருக்கு கொரோனா உறுதியானது. அப்படியே படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மேலும், கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,589 ஆக உள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.