சென்னை அடையார் மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.ஏ.புரம் பகுதியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அப்பகுதியில் மட்டும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்.ஏ.புறம் காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளது. அடையார் மண்டலத்திற்கு உட்பட்ட 173 வது வார்டு பகுதியான ஆர்.ஏ.புரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் கோயம்பேடு பகுதியில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து தள்ளு வண்டியில் விற்பவரிடம் காய் வாங்கியுள்ளனர்.
அந்த வியாபாரிக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, இப்பகுதியில் இருப்பவர்கள் பலருக்கும் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும் காமராஜர் சாலையை தற்போது முழுமையாக மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து இந்த பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முகக்கவசங்கள் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திறக்கப்பட்டிருக்கும் கடைகளை சீல் வைத்து மூடிவருகின்றனர். இன்று மட்டும் இப்பகுதியில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 5 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை கொடுத்துவந்த போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மக்கள் சாதாரணமாக தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது வரை அடையார் மணடலத்தில் 472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.