கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள்
- கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு. மருத்துவர்கள், செவிலியர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்கள் என குறிப்பிட்டுள்ளார்.
- மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்
- வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும்
- உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்.
- உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும்.
- விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.
- விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்
- 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்
- விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்
- முறைசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்
- 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.
- தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 75 சதவீத நிதி அல்லது மூன்று மாத ஊதியம் இதில் எது குறைவோ அதனை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம். 100 ஊழியர்களை கொண்ட நிறுவனத்தில் ரூ.15000க்கும் கீழ் 90% பேர் சம்பளம் வாங்கும் பட்சத்தில் இந்த திட்டம் பயனளிக்கும்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி சலுகை தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.