மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மேலும் ரூ .3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில், கடந்த 24 ,மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆகக் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு கொரோனா உள்ளது. ஆண்களில் 76 சதவீத வழக்குகளும், பெண்களில் 24 சதவீதமும் பதிவாகியுள்ளன என இணை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 30 பேர் இறந்துள்ளனர். மொத்த இறப்புகளில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
30 சதவீதம் 40 வயது முதல் 60 வயது வரையிலும், 7 சதவீதம் இறப்புகள் 40 வயதுக்குக் குறைவானவர்களாக பதிவாகியுள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 13 நாட்களில் 1340 வேகன்கள் மூலம் சர்க்கரையும், 958 வேகன்கள் மூலம் உப்பும், 316 வேகன்கள் மூலம் உண்ணக்கூடிய எண்ணெயும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது என கூறினார்.
அதேபோல, ஊரடங்கு நடைபெற்று வரும் இந்த காலகட்டத்தில், 16.94 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 13 மாநிலங்களுக்கு 1.3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 8 மாநிலங்களுக்கு 1.32 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை பயன்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அதன் செயல்திறனுக்கான வரையறுக்கப்பட்ட சான்றுகள் குறைவாகவே உள்ளன. சமூக மட்டத்தில் இதைப் பயன்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என லாவ் அகர்வால் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டம் அவர்களின் தொடர்புகள் என 25,000க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் அவர்கள் பார்வையிட்ட ஹரியானவை சேர்ந்த 5 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.