கேரளாவில் இன்று புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு காணொலி மூலம் பேட்டி கொடுத்த அவர், கண்ணுரில் 10, பாலக்காட்டில் 4, காசர்கோடு பகுதியில் 3, மலப்புரத்தில் 1, கொல்லம் பகுதியில் 1 என மொத்தம் 19 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். அதில், 12 பேர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 426 ஆக அதிகரித்துள்ளது. அதில், 117 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயம் கேரளாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது.
அதில், 15,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3,260 பேர் காரோணவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக கேரள மாநிலம் கொரோனாவில் இருந்து விடுபட்டு வந்தது. அம்மாநிலத்தில் புதிதாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. அதேசமயம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் 19 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.