தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ளார். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என கூறிய அவர், நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மற்றும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் ஒரு முறை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 3,371 வென்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளன. மக்களுக்கு அத்தியவசிய பொருட்களை எந்த தடையுமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் தொழில்கள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் 70 பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதி, அம்மா உணவகங்கள் மூலம் விலையில்லா உணவுகள் வழங்கப்படுகிறது. 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. 170 ரயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.