கடந்த 24 மணி நேரத்தில் 1076 புதிய வழக்குகள் மற்றும் 32 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதில், 11,616 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, இதுவரை 1766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் இதுவரை 452 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது சீனாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் திக்கித் திணறி வருகின்றன. இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதன் காரணமாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டு 24வது நாளாக அமலில் உள்ளது.
மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், காலை கிடைத்த தகவலின் படி, 13,387 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது, 13,835 ஆக அதிகரித்துள்ளது.