கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,412ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக இருந்த நிலையில் தற்போது 6,741ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 12 மணி நேரத்தில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 16,002 ரத்த மாதிரி சோதனைகளில் 0.2 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன. இதுவரை சமூக பரவல் இல்லை என்பதால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் ஏப்., 14 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது.