Categories
மாநில செய்திகள்

ஒருங்கிணைந்த செயல்பாட்டால் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது; சமூக பரவலாக இல்லை – முதல்வர் பழனிசாமி!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை இன்று ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணை திறப்பு, குடிமராத்து பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் கொரோனா இல்லாத மாவட்டமானது சேலம் என கூறியுள்ளார்.

மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது, சமூக பரவலாக இல்லை. கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 67 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளி மாநில தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ ர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார் பொது மக்களும் அரசின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் சிறு,குறு மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பணியாளர்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பணிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறோம். பொது விநியோக திட்டத்தின்படி அனைவருக்கும் அத்தியாவசிய பொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் டெல்டாவில் கடைமடை விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |