கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவை காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று திருச்சியை சேர்ந்த 4 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய- மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களை மருத்துவமனைகள் அரசிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.