இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,872 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,656 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,088ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,135ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 53,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு இன்றுடன் நிறைவடைடைய உள்ள நிலையில் 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் தேதிக்கு முன் இதற்கான விவரங்கள் வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறிபிடத்தக்கது. இதனால் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகவுள்ளது.