Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது; நீண்டநாள் இருக்கும் – மருத்துவக் குழு விளக்கம்!

கொரோனா வைரஸ் உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது, நீண்டநாள் மக்கள் மத்தியில் இருக்கும் என மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மாலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே இந்த மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் படி ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய இருந்த ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தற்போதைய நிலை குறித்தும், ஊரடங்கை தளர்த்துவைத்து குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பேட்டியளித்த ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் மற்றும் மருத்துவ குழு, ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த முடியாது, படிப்படியாகத் தான் ஊரடங்கை தளர்த்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு என்றும் சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது. கொரோனா வைரஸ் நீண்டநாள் நம்முடன் இருக்கும் என்பதால் ஒட்டு மொத்த ஊரடங்கு தளர்வு என்பது சாத்தியம் இல்லை.

சமூக இடைவெளி அவசியம் கூட்டம் கூடுவதை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனையை அதிகரித்ததால் கொரோனா தொற்றை அதிக அளவில் கண்டறிய முடிந்தது என்றும் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உள்ளது என்றும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |