உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, உள்துறை, விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களுடன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தார்.
மேலும் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுடன் காணொலி காட்சி மூலம் அவர் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின்போது கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள பயணிகளைக் கண்காணிக்க வேண்டும் எனவும், சீனாவிலிருந்து திரும்பி வருபவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்ய ஆய்வகங்கள் டெல்லி எய்ம்ஸ், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை, மும்பை கஸ்தூர்பா மருத்துவமனை உள்ளிட்ட ஆறு இடங்களில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
மேலும் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையிலும் இன்று முதல் இந்த ஆய்வகம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட மொத்தம் ஆறு இடங்களில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டு அலுவலகங்கள், நோடல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் கட்டுப்பாட்டு அழைப்பு எண்ணை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
அதேபோல், புனே தேசிய வைராலஜி நிறுவனமானது இதுவரை 5 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்துவருகிறது. இதில் நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 49 ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 48 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.