கேரளாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஸ்பெஷல் உணவு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கேரள மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மிகவும் விசேஷ உணவுகளும் வழங்கப்படுகின்றது. அதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு காலையில் உணவாக தோசை, சாம்பார், 2 அவித்த முட்டை, 2 ஆரஞ்சு பழங்கள், டீ மற்றும் ஒரு பாட்டில் குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பழச்சாறு வழங்கப்பட்டுகிறது.
அதேபோல மதிய உணவும் ஸ்பெஷலாக வழங்கப்படுகிறது. ஆம், சப்பாத்தி, பொரித்த மீன் மற்றும் கேரள உணவு வகைகளும் மதியம் வழங்கப்படுகின்றது. மாலை நேரத்தில் பிஸ்கெட் மற்றும் டீயும், இரவில் அப்பம், 2 வாழைப்பழங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தனி உணவு வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு காலை 2 அவித்த முட்டை, சூப், பழச்சாறு ஆகியவை வழங்கப்படுகின்றது. பின்னர் சிறிது நேர இடைவெளிக்கு பிறகு அன்னாசி பழச்சாறு வழங்கப்படும். பகல் உணவாக ரொட்டி, வெண்ணை மற்றும் பழங்களும், இரவில் ரொட்டி, முட்டை பொரியல், பழங்கள் வழங்கப்படுகின்றது. இந்த தகவலை எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.