சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 85 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த வைரஸானது சிக்கன், முட்டை, எலி, உயிரிழந்தவர்கள் சடலம் என பல வகையிலும் பரவுவததாக வதந்திகள் நாளுக்கு நாள் வெளியாகி கொண்டிருக்கிறது.
இதனால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என கூறியுள்ளார்.
இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா பரவாது என்றும் தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கொரோனா பரவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்பதால் வதந்திகளை நம்பி அச்சம் கொள்ள தேவையில்லை என தகவல் அளித்துள்ளார்.